இலங்கையில் தனது 150ஆவது விற்பனை மையத்தைத் திறந்துள்ள கீல்ஸ், 35 ஆண்டுகால தனது பயணத்தில் சில்லறை வர்த்தகத்தைத் தாண்டி விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் சமூகங்களுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
1991ஆம் ஆண்டு கொழும்பு லிபேர்ட்டி பிளாசாவில் தனது முதல் விற்பனை மையத்தை ஆரம்பித்த கீல்ஸ், தற்போது நாடு முழுவதும் 150 விற்பனை மையங்களைக் கொண்டுள்ளது.
மாறிவரும் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப தனது சேவைகளை விரிவுபடுத்தி வரும் கீல்ஸ், புதிய விளைபொருட்கள், தயாரிக்கப்பட்ட உணவுகள், பல்வேறு நுகர்வோர் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருவதாக குறிப்பிடுகிறது.
கீல்ஸ் நெக்ஸஸ் செயலி மூலம் 2.9 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகள், வெகுமதிகள் மற்றும் விளம்பரங்களை வழங்குவதற்கான வசதிகள் அதில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான ஆதரவு
விவசாயத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், பெண் விவசாயத் தொழில்முனைவோர் உட்பட 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிதி அறிவு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயம், இயற்கை விவசாயம் மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக கீல்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், 10 சேகரிப்பு மையங்கள் ஊடாக 4,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
‘கொவி திரிய’ உள்ளிட்ட திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு நிலைபேற்றியல் சார்ந்த விவசாயம், சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குத் தயாராகும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆதரவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
தற்போது 6,500க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள கீல்ஸ், அவர்களின் திறன் மேம்பாடு, தொழில்சார் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
NAITA உள்ளிட்ட நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் மூலம் ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பெண்களின் தலைமைத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக ‘She Rises’ திட்டமும், மன மற்றும் சமூக நல்வாழ்வுக்காக ‘Peace Pod’ திட்டமும், தனிப்பட்ட நிதி நிர்வாகத்துக்காக ‘Financial Wellbeing Programme’ திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றன.
சமூகப் பொறுப்புத் திட்டங்கள்
விற்பனை மையங்களுக்கு அப்பால் சமூகங்களுக்கான பல்வேறு திட்டங்களையும் கீல்ஸ் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி உணவுத் திட்டத்தின் ஊடாக 116 முன்பள்ளிகளைச் சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 538,000க்கும் அதிகமான வேளை உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, John Keells Foundation மற்றும் The Rainbow Institute இணைந்து முன்னெடுக்கும் ‘Skill Into Progress’ (SKIP) திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 இடங்களில் 1,322 மாணவர்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 280 பேர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150ஆவது விற்பனை மையத்தை எட்டியுள்ள நிலையில், நுகர்வோர் சேவைகள், விவசாயிகளுக்கான ஆதரவு, ஊழியர் மேம்பாடு மற்றும் சமூகத் திட்டங்கள் ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுப்பதே தமது நோக்கம் என கீல்ஸ் தெரிவித்துள்ளது.